விட்டுப் போன மழையில்
ஒட்டி நின்ற மேகம் விலக
ஞாயிறு தானும் விடைபெற
சாயங்கால இருட்டுக் கவ்வ, தவளை அதன் ராஜ்யம்
வானிலை அறிக்கை அறிவாயோ?
வானையே நீயும் அறிந்தாயே!
கொட்டித் தீர்ந்து ஓய்ந்த மழை இனி
தட்டி தட்டி உனை தடுக்காதே!
நேரம் பார்த்துக் களைப்பாற
சோம்பல் முறித்து இளைப்பாற
சொத சொதத்த சேற்றினிலும்
வெது வெதுப்புக் கண்டாயோ!
நீட்டி முழக்கி குதித்துத் தான்
நீயும் அடிக்கும் கும்மாளம்
கிரீச் கிரீச் சென்னும் உன் குரலில்
தெரிகிறதே, தெள்ளத் தெளிவாய்!
இன்னும் ஒன்று தெரிகிறது
உன்னிசை ஒன்றும் தனி இல்லை,
உன்னோடு உள்ளது உன் சுற்றம்
பண்ணோடு இணைந்தீர் நீவீர் யாவரும்.
குரலால் கூடிக் குவிகிறீர்
நீர் நிலையின் அருகருகே
ஒன்று போல் குரல்கொடுக்க
என்று பயின்றீர் தவளையரே?



