பெண்ணின் மனம் ஆனது கடலாக!
ஆழத்தில் இருக்கும் அமைதி
கரை நெருங்க நெருங்கக்
நுரையாய்க் கரைந்து போவதேன்?
மணநாள் நெருங்க நெருங்க
மனம் அலையாய் அலைவதேன்?
என்னை விரும்புவாரோ, அல்லது
தன்னைப்போல் ஏன் இல்லை என்பாரோ?
என் அலங்காரம் ரசிப்பாரோ அல்லது
அதிகம் என்று நினைப்பாரோ?
நினைத்ததையும் தான் சொல்வாரோ?
சொல்லாமலே சுழற்றி விடுவாரோ?
பெண் பார்த்து பிடித்துத் தான்
இந்நாளில் வருகிறார் மணம் முடிக்க
இருப்பினும் ஏன் இந்தத்
தவிப்பு என் பேதை நெஞ்சுக்கு?
ஆயிரம் பேர் சொல்லிவிட்டார்
அழகாய் கொட்டுகிறேன் என்று
ஆயினும், காதுகள் கேட்டதை
பேதை நெஞ்சம் ஏன் கேட்கவில்லை?
மணவாளன் சொல் மட்டுமே
மனம் கேட்கத் துடிப்பதாலோ?
அலை ஓயாக் கடல் போலே
அச்சம் ஓயாப் பெண் ஆனேனே?
உன் சொல் ஒன்றே போதுமே
உலக அழகியாய் உணர்வேனே!
வார்த்தைகளால் சொல்ல இயலாவிடினும்
பார்த்தவுடன் சொல்லிவிடு பார்வையாலேனும்!
No comments:
Post a Comment